சென்னையில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கரோனா தொற்றுக்கெதிரான போரில் முன் படைவரிசை வீரர்களான காவல்துறையைச் சேர்ந்த கூடுதல் ஆணையர் உள்ளிட்ட மேலும் 2 உயர் அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.
இதில் கோயம்பேடு சந்தைக்குச் சென்று வந்தோர், அங்குள்ள தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தது காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் எண்ணிக்கை கூடி வருகிறது.
சென்னை ஆரம்பத்தில் 100, 200 என்கிற எண்ணிக்கையில் இருந்து 1000 என்கிற எண்ணிக்கையை அடைய வெகுநாள் ஆனது.
ஆனால் அதன் பின்னர் 500, 300, 200 என்கிற எண்ணிக்கை நாள்தோறும் வருவதால் சென்னை, தமிழகத்தின் மொத்த எண்ணிக்கையில் 46 சதவீதத் தொற்றுள்ளோர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
கரோனா தொற்று சென்னையில் பொதுமக்களை மட்டுமல்ல, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் முன்னணிப் படைவரிசை வீரர்களான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், காவல்துறையினரை அதிகம் பாதித்துள்ளது.
அதிலும் அதிகமாக பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலருக்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
கரோனா பாதுகாப்புப் பணியின் ஆரம்பத்திலேயே காவல் ஆணையர் 50 வயதுக்கு மேற்பட்டோர், வாழ்நாள் நோய் உள்ளவர்கள் தங்களைப் பாதுகாப்புப் பணியிலிருந்து விடுவித்து வீட்டில் ஓய்வெடுக்கலாம் என உத்தரவிட்டார்.
நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனாலும் ஆங்காங்கு ஒரு சிலருக்கு கரோனா தொற்று பரவ ஆரம்பித்தது.
பின்னர் உதவி ஆய்வாளர் அளவில் பரவ ஆரம்பித்த நிலையில் சமீபத்தில் கோயம்பேடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ஆணையருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக உயர் அதிகாரிகள் சிலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வடக்கு மண்டலத்தில் உள்ள உதவி ஆணையர் ஒருவருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மேலும் 2 உயர் அதிகாரிகளுக்கும் ஒரு உதவி ஆணையருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உயர் அதிகாரிகளில் ஒருவர் சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும் கூடுதல் ஆணையர், மற்றொருவர் தெற்கு மண்டலத்தில் உள்ள துணை ஆணையர் ஆவார்.
இதுதவிர நேற்று சென்னையில் 4 காவல் ஆய்வாளர்களுக்கும், காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஆய்வாளருக்கும் தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆயுதப்படைக் காவலர்கள் என நூற்றுக்கணக்கான போலீஸார் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களது குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் காவலர்கள் தமது பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர்.
காவலர்களுக்கு அளிக்கும் ஒத்துழைப்பு மற்றும் அவர்கள் பாதுகாப்பின் உண்மையான நோக்கம் நிறைவேற அனைவரும் அவசியமின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்த்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.