மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 35,952 பேருக்கு கரோனா பாதிப்பு: கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு

நாடுமழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,118 ஆக உள்ள நிலையில் அதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 35,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59,118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 32,987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,12,64,637 பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 257பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,60,949 ஆக அதிகரிதுள்ளது.

இந்தநிலையில் நாடுமழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,118 ஆக உள்ள நிலையில் அதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 35,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.62,685 ஆக அதிகரிததுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53,795 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றன நிலையில் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகளை மக்கள் உரிய முறையில் கடை பிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே