அனைத்து போலீஸாருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி: சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னையில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு படிப்படியாக கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. உடலில் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள சில போலீஸார் தயக்கம் காட்டினர். இந்நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், போலீஸாருக்கு விளக்கி வருகிறார்.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில், போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. சென்னை காவல் துறையில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் படிப்படியாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையர் லட்சுமி (தெற்கு மண்டலம்), துணை ஆணையர்கள் சாமிநாதன் (நவீன கட்டுப்பாட்டுஅறை), பகலவன் (திருவல்லிக்கேணி), சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே