கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பத்தனம் திட்டா அருகேயுள்ள பந்தளம் பகுதியை சேர்ந்த கொரோனா பாதித்த இரு பெண்களை சனிக்கிழமை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .

அதில் 20 வயது இளம் பெண்ணும் ஒருவர் .

இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சனிக்கிழமை இரவில் பந்தளம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸை டிரைவர் நவுஃபல் (வயது 29),என்பர் ஓட்டி சென்றுள்ளார். கோழச்சேரி என்ற இடத்தில் ஒரு பெண்ணை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.

மற்றோரு பெண்ணை பந்தளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அங்கிருந்து 10 நிமிட பயண நேரத்தில்தான் பந்தளம் மருத்துவமனை உள்ளது.

அப்போது, ஆம்புலன்ஸில் வேறு எந்த ஊழியர்களும் இல்லை. இரவு 10 மணியளவில் ஆம்புலன்ஸ் டிரைவருடன் கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் பெண் தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனால், திட்டமிட்டே வேறு பாதையில் ஆம்புலன்ஸை ஓட்டி டிரைவர் ஆரன்மூலா என்ற இடத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.image

மேலும், வெளியே சொன்னால் தன் வேலை போய் விடும் எனவும் தன் வாழ்கை பாழகி விடும் என்றும் அந்த பெண்ணிடத்தில் கூறி கெஞ்சியுள்ளார். .

பிறகு, அடூர் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை கொண்டு சேர்த்துள்ளார்.

மருத்துவமனையில் சேர்ந்ததும் இது தொடர்பாக அந்த பெண் புகார் அளித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக, ஆம்புலன்ஸ் டிரைவர் நவுஃபல் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நவுஃபல் காயங்குளம் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கிரிமினல் பின்னணி கொண்ட இவர், கேரள சுகாதாரத்துறையால் நடத்தப்படும் கொரோனா நோயாளிகளுக்கான ‘கனிவு ‘என்று அழைக்கப்படும் கேரளா ஆம்புலன்ஸ் நெட்ஒர்க்கில் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

கிரிமினல் பின்னணி கொண்டவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் சேர்ந்தது எப்படி என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

கனிவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கட்டாயம் போலீஸிடத்திலிருந்து நற்சான்றிதழ் வாங்கி அளித்திருக்க வேண்டும்.

ஆனால், காயம்குளம் போலீஸில் நற்சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளேன்.

இன்னும் வரவில்லை என்று கூறி பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், இப்போது வரை அந்த சான்றிதழை கொடுக்காமலேயே நவுஃபல் பணியில் இருந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தன்னை மன்னித்து விடுமாறு இளம் பெண்ணிடம் நவுஃபல் கெஞ்சிய போது அந்த பெண் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

தற்போது, அந்த வீடியோவை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு நவுஃபலை பி.பி.ஈ கிட் அணிந்து அழைத்து வந்து நேற்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும், கேரள மக்களும் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து கேரள மகளிர் ஆணைய தலைவி ஜோசப்பின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸ் டிரைவர்களை பணிக்கு அமர்த்துமுன் அவர்களது பின்புலம் குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே