தொடரும் காங் – திமுக கூட்டணி புகைச்சல்!

திமுக காங்கிரஸ் கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டணியில் புகைச்சலை அதிகரிக்கும் வகையில் காங்கிரசாரை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி,  கட்சியின் மாவட்ட செயலாளர் வேணு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, அடுத்தக்கட்ட உள்ளாட்சித் தேர்தல், மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்  வெற்றி பெற எவ்வாறு திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.  

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி அவ்வாறு செய்தால் ஆள்பிடிக்கும் பாஜக அவர்களை அழைத்துச் சென்று விடுவார்கள் என்று தெரிவித்தார்.  

கட்சிக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் குறித்து அப்போது அவர் ஆபாச வார்த்தைகளை கூறி விமர்சித்தது கூட்டத்தில் பங்கேற்றவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

மேலும் கூட்டணிக் கட்சியினரான காங்கிரஸ் காரர்களையும் கடுமையாக விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி, ஆணாய் பிறந்து வீணாய்ப் போன காங்கிரஸ்காரர்கள் அடம் பிடித்ததால் தான் திருவள்ளூரில் திமுக எம்பி உருவாக முடியாமல் போனதாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகர், திமுகவின் மாநில தொழில்நுட்ப பிரிவு அணி துணைச் செயலாளரான தன் பெயரினை கூட முறையாக போடாமல் புறக்கணிப்பதாக கூட்டத்தில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசிய  பின்னர்தான் சற்று ஓய்ந்தது.

இந்நிலையில் கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே