ஆதரவாளர்களுடன் ஆலோசனை – இல்லத்தில் இருந்து புறப்பட்டார் மு.க.அழகிரி..!!

சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

இந்த கூட்டம் அவரது இல்லத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தொண்டர்கள் புடைசூழ பிரச்சார வாகனத்தில் மு.க.அழகிரி புறப்பட்டார்.

2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தற்போது தான் அழகிரி தனது பிரச்சார வாகனத்தில் பயணிக்கிறார்.

அழகிரி செல்லும் வழிகளில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியதன் காரணமாக அனைவரும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

முக அழகிரி மண்டபத்தை சென்றடைந்தவுடன் ஆலோசனை கூட்டம் துவங்க உள்ளது.

கூட்டத்தின் மூலம் தனது பலத்தை நிரூபித்து அதன் மூலம் திமுகவில் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் இணைத்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக வியூகம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவில் தங்களை இணைத்து கொள்ள முயற்சி மேற்கொள்வது குறித்தும் புதிய கட்சி துவங்குவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு முக அழகிரி பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முடிவுகள் இன்று அறிவிக்கப்படவில்லை என்றால் மு.க.அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே