காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையால், பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்த நிலையில், இந்திரா காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததால் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் இன்று மாலை சந்தித்துப் பேசுகின்றனர்.

இதில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேல், சுனில் தத்கரே, அஜித் பவார் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இதில் சிவசேனாவுடன் இணைந்தால், அந்தக் கூட்டணியின் பெயர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் 2022-ம் ஆண்டு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் சிவசேனாவுடன் தொகுதிப்பங்கீடு செய்து கொள்வதா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

குறைந்தபட்ச பொது செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிவசேனா எம்எல்ஏ-க்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

அதில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எம்எல்ஏக்களிடம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே