டெல்லியில் வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதில் இருந்தே காங்கிரசும் ஆம் ஆத்மிக் கட்சியும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான கருத்துக்களைக் கூறி அவர்களைத் தூண்டிவிட்டதாகத் தெரிவித்தார்.
காங்கிரசின் மணிசங்கர் ஐயர், சல்மான் குர்சித், சசிதரூர் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசியதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசைன் வீடு வன்முறையாளர்களின் பாசறையாகத் திகழ்ந்திருப்பது அங்குக் கற்குவியல், பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டதன் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் ஜவடேகர் குறிப்பிட்டார்.
காவல்துறையினர் கொல்லப்பட்டது குறித்துக் காங்கிரசும் ஆம் ஆத்மிக் கட்சியும் இது வரை வாய் திறக்காதது ஏன்? எனவும் ஜவடேகர் கேள்வி எழுப்பினார்.