12ம் வகுப்பு பொதுத்தேர்வு – முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சமர்பித்தார்.

கொரோனா காரணமாக பிளஸ் 2 தேர்வு நடத்தப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வும் ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரியர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு உட்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், இ-மெயில் முகவரி அளித்து, தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் கருத்து கூறுமாறு கேட்கப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டன.

அந்தக் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கையை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், முதலமைச்சரிடம் இன்று சமர்பித்தார். அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே