நத்தத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக விழா கூட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல், அடிதடி ரகளையாக மாறியது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஆண்டி அம்பலம், இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஷாஜகான் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ச்சி அடைந்தார்.

இந்த முறையும் திமுக தலைமை கழகம் ஆனது ஆண்டி அம்பலத்திற்கே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளித்துள்ளது. 

அதன்படி, திமுக சார்பில் நத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நத்தம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் ரத்தினகுமார் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரும் நத்தம் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளித்து திமுக இவரது மனுவை நிராகரித்து விட்டது.

இதனால் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், நத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற ஆரம்பித்தது.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கி மேடையில் ஏற ஆரம்பித்தவுடன், ரத்தினகுமாரின் ஆதரவாளர்களும், ஆண்டி அம்பலத்தின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் இது கைகலப்பாக மாறியது.

அப்போது, கூட்டத்திலிருந்த நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.

அப்போது, மண்டபத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அலறியடித்து அங்கும் இங்குமாக ஓட ஆரம்பித்தனர்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே