தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என முதல்வர் பழனிசாமி என்னிடமே கூறியுள்ளார் – சீமான்

எனக்குக் கூடத்தான் பிறப்புச் சான்றிதழ் இல்லை. நிரூபிப்பது கடினம்தான் தம்பி என தன்னிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை திருத்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேறி சட்டமாகியது.

இதற்கு டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாஸ் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அது போல் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட இரு சட்டங்களின்படி பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இதையெல்லாம் கண்டித்து திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

21 நாளான நேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் என்பிஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போல் தமிழகத்திலும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார்.

நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச் சான்றிதழில் இருக்காது.

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரானது.

இந்த சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களே அரசு முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலைதான் வரும்.

இந்தியாவில் இனி அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என கூறலாமே தவிர, ஏற்கெனவே வந்தவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என்பது குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவது பாசிசம் ஆகும்.

பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரே சிந்தனை கொண்டவர்கள்.

அதனால்தான் இந்தியா வந்த டிரம்ப் சிஏஏ குறித்து எதையும் பேசவில்லை என தெரிவித்தார்.

அது போல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என கூறியுள்ளார்.

தன்னிடமே இல்லாத போது ஏழை எளிய மக்களிடம் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில் என் தந்தையிடம் எப்படி அந்த சான்றிதழ் இருக்கும்? அதற்கு நான் இறந்துவிட வேண்டுமா என பகீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே