கரோனா பொது முடக்கத்தில் அடுத்தக்கட்ட தளர்வுகள், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 28 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பின்னர், தமிழகத்தில் பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை அளிப்பது குறித்த முடிவு செய்யப்பட உள்ளது. 

குறிப்பாக, திரையரங்குகள் திறப்பு, புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்குவது போன்றவற்றின் மீதான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மின்சார ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கு தெற்கு ரயில்வேக்கு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே