தென்காசி பகுதியில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு.!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது.

இந்த மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கார் பருவ நெல் சாகுபடியும்,  அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிசான பருவ நெல் சாகுபடியும்  மேற்கொள்ளப்படும்.

அதாவது தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் நெல் சாகுபடியும்,  வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.

நெல்லை  மாவட்டத்தில் தான் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய பாசனத்திற்கு கை கொடுக்கும் முக்கிய அணைகள் அமைந்துள்ளன.

இங்கிருந்து கிடைக்கும் மழை நீர் தான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்வது வழக்கம்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல்லை மாவட்டத்திற்கு நல்ல மழை கிடைப்பது வழக்கம்.

இதன் மூலம் பிசான நெல் சாகுபடி விவசாயம் தங்கு தடையின்றி நடைபெறும். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி  மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் அட்வான்ஸ் கார் சாகுபடி எனப்படும்  பழந்தொழி சாகுபடியும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு நடப்பாண்டு கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று: தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு கார் சாகுபடிக்கு வரும் 21-ம் தேதி முதல் 25.11.2020-ம் தேதி  வரை 97 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், தென்காசி மாவட்டம், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் ஆகியவற்றில் உள்ள 8225.46 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனவும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே