முதல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 178 ரன்கள் எடுத்தது. ‘சுழலில்’ அசத்திய அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது.

வாஷிங்டன் (33), அஷ்வின் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர், அஷ்வின் ஜோடி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 

ஜாக் லீச் பந்தில் வாஷிங்டன் ஒரு பவுண்டரி அடிக்க, அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது லீச் பந்தில் அஷ்வின் (31) அவுட்டானார்.

ஷாபாஸ் நதீம் (0), இஷாந்த் சர்மா (4), பும்ரா (0) நிலைக்கவில்லை. முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

வாஷிங்டன் சுந்தர் (85) அவுட்டாகாமல் இருந்தார்.

இங்கிலாந்து சார்பில் டாம் பெஸ் 4, ஆண்டர்சன், ஆர்ச்சர், லீச் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு அஷ்வின் தொல்லை தந்தார்.

இவரது ‘சுழலில்’ ரோரி பர்ன்ஸ் (0), டாம் சிப்லே (16), பென் ஸ்டோக்ஸ் (7) சிக்கினர். டான் லாரன்ஸ் (18) நிலைக்கவில்லை.

ஜோ ரூட் (40) ஓரளவு கைகொடுத்தார். நதீம் பந்தில் போப் (28), பட்லர் (24) அவுட்டாகினர்.

தொடர்ந்து அசத்திய அஷ்வின் பந்தில் டாம் பெஸ் (25), ஜோப்ரா ஆர்ச்சர் (5), ஜேம்ஸ் ஆண்டர்சன் (0) ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜாக் லீச் (8) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியா சார்பில் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார்.

பின் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (12) ஏமாற்றினார்.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து, 381 ரன்கள் பின்தங்கி இருந்தது.

சுப்மன் கில் (15), புஜாரா (12) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே