வாக்காளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கூரில் பட்டியலின மக்களுக்கு தனி வாக்குச்சாவடி கோரிய சுப்பிரமணியனின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

பட்டியலின மக்கள் வாக்களிக்க சென்றபோது குறிப்பிட்ட சாதியினர் தாக்குதல் நடத்தியதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், தெற்கூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் கூறியதாவது; எங்கள் கிராமத்தில் 250 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இரண்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும். 2014-ல் பட்டியலின மக்கள் வாக்களிக்க செல்லும்போது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

கடந்த 2001, 2006, 2011 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கருங்குளம் பஞ்சாயத்து ஆரம்பப்பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனி வாக்குச்சாவடியை அமைப்பதில்லை என்பதால், உள்ளாட்சித் தேர்தலை போல, சட்டப்பேரவை தேர்தலிலும் கருங்குளம் ஆரம்பப் பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும், இந்த மனுவை பரிசீலித்து தனி வாக்குச்சாவடி அமைக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனி வாக்குச்சாவடி அமைக்க உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இருப்பினும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே