சென்னையை அடுத்த மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், நள்ளிரவில் நிறுத்தப்பட்ட தீயணைக்கும் பணி தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜி.ஆர்.ஆர். லாஜிஸ்டிக்ஸ் கஸ்டம் வேர் ஹவுஸ் என்ற கெமிக்கல் குடோனில், நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென தீ பிடித்தது.
இதையடுத்து, 25 தீயணைப்பு வாகனங்கள், 20-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ அருகிலிருந்த 3 குடோன்களுக்கும் பரவி கரும் புகையுடன் பல அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து 3 ஏர் லிப்டர்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் கடுமையாகி போராடி நள்ளிரவு ஒரு மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
80 சதவீத அளவிற்கு தீ அணைக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்ட பணிகள், விடியற்காலையில் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது
இங்கு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படும் டெட்ரா ஹைட்ரோ கார்பன், டை மெத்தில் சல்பாக்சைடு போன்ற ரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தீ முழுவதும் அணைக்கப்பட்ட பிறகு விபத்து தொடர்பாக, காவல்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.