தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் அக்டோபர் 2ஆம் தேதி சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசானது மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை(செப். 29) கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக செப்.30ல் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள உள்மாவட்டங்கள், அக்.1ல் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 2ஆம் தேதி உள்மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே