ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊரடங்கை கண்டிப்பாக அமல்படுத்துமாறு இந்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநிலத் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் நேற்று நடத்திய ஆலோசனையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்கள் இடையே பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவை மார்ச் 31- ஆம் தேதி வரை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா பாதிப்புள்ள ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்களை மார்ச் 31- ஆம் தேதி வரை முடக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. 

இதில் தமிழகத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு இந்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாநில அரசுகள் ஊரடங்கை சரிவர செய்யாமல் இருந்தார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை மக்கள் வீடுகளுக்குள் இருக்காமல் அரசு உத்தரவை மீறினால், ஊரடங்கு விவகாரத்தை நேரடியாக மத்திய அரசே கையில் எடுத்து, வெளியில் வரக்கூடிய மக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே