வாடகைதாரர்களிடம் உரிமையாளர் வாடகை வசூலிக்க தடைக்கோரி வழக்கு: மனுதாரருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!!

வாடகைதாரர்களிடம் உரிமையாளர் வீட்டு வாடகை வசூலிக்க தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வழக்கு விவரம்:

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இது தொடர்பாக ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பொது ஊரடங்கை அறிவித்துள்ளது. தற்போது 6ம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு குடியிருப்பு வாசிகளிடம் இருந்து வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்கக்கூடாது என மார்ச் 29ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி தமிழக அரசும், பேரிடர் மேலாண்மை சட்டம், அவசர கால பெருந்தொற்று நோய்த்தடுப்பு மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் வாடகை வசூல் செய்வதற்கு தடை விதித்து அரசாணையை வெளியிட்டது.

ஆனால் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூல் செய்வதாகவும், அவ்வாறு வாடகை செலுத்தாதவர்களை வீட்டை காலி செய்ய வைக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெருந்தொற்று காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நோய் தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும், எனவே இந்த பெருந்தொற்று காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்:

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கில் இதுபோன்று உத்தரவிடுவது சாத்தியமில்லை என தெரிவித்தனர்.

மேலும் இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக வாடகைதாரர்களோ, வீட்டின் உரிமையாளர்களோ வழக்கு தொடரவில்லை என தெரிவித்த நீதிபதிகள், இதனை பொதுநல வழக்காக கருத முடியாது என கூறியுள்ளனர். அரசின் அறிவிப்பு தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஏன் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர். அதேபோல, இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என கேட்ட நீதிபதிகள் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே