சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தரப்பில் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிய ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

அதே உற்சாகம் கோலியையும் தொற்றிக்கொள்ள, விசில் அடிக்கச் சொல்லி விஜய் பாணியில் கேக்கல கேக்கல என்று சைகையால் கேட்டார்.

இந்தியா- இங்கிலாந்து மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை அனுமதிக்கவில்லை.

இரண்டாம் டெஸ்ட்டில் 50% ரசிகர்களை அனுமதித்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சென்னை மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

மைதானத்தில் திரளாகத் திரண்ட ரசிகர்களுக்கு விருந்தாக நேற்று ரோஹித் சர்மா அதிரடி காட்டி 161 ரன்கள் விலாசியதும், ரஹானே மற்றும் ரிஷப் பந்த்தின் ஆட்டமும் வெகுவாக ரசிக்கப்பட்டது. 

இன்று காலையிலும் அதே உற்சாகம் தொடர்ந்தது.

காலையில் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டமும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் மளமளவென்று விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது ரசிகர்களை வெகு உற்சாகத்தில் ஆழ்த்தியது.

ஸ்டேடியம் முழுவதும் உற்சாக விசில் பறந்தது.

அது கேப்டன் கோலியையும் தொற்றிக்கொண்டது. அவர் ரசிகர்களைப் பார்த்து விசில் அடியுங்கள் எனத் தானும் விசில் அடித்துக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

இதையடுத்து ரசிகர்கள் விசில் அடிக்க, காதின் பக்கம் கையை வைத்து, கேக்கல, கேக்கல என ‘பிகில்’ பட விஜய் பாணியில் சைகையில் தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

தற்போது இந்தக் காணொலியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. விசில் போடு என்ற ஹேஷ்டேக் போட்டு அதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே