யாஷ் புயல் : 22 சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே.

வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும் அது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வரும் 24ஆம் தேதி புயலாக தீவிரமடைந்து 26ஆம் தேதி ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் தீவுகளில் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாறும் அத்தியாவசிய மருந்துகள் வசதிகளை போதிய அளவில் வைத்திருப்பதை உறுதி செய்யுமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே. நாகர்கோவில் – ஹவுரா, திருச்சி- ஹவுரா, சென்ட்ரல்- புவனேஸ்வர் உள்ளிட்ட 22 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்திருப்பதாகவும் நாளை முதல் 29ஆம் தேதி வரை 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே