டைப் 1 டயாபட்டிஸ் என்பது பெரும்பாலும் இளம்வயதிலேயே வரக்கூடிய நீரிழிவு நோய் என்பது நமக்கு தெரியும். நீண்ட நாட்களாக கணையம் மிகக்குறைந்த அளவிலோ அல்லது இன்சுலினை உற்பத்தி செய்யாமலோ போனால் இந்தவகை நீரிழிவு நோய் உருவாகிறது. டைப் 1 டயாபட்டிஸானது டைப் 2 போல பொதுவானது அல்ல. பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்கினாலும், சில சமயங்களில் பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உருவாகிறது. மேலும் சிலவகை பாலை தொடர்ந்து குடிப்பதும் டைப் 1 டயாபட்டிஸுக்கு வழிவகுப்பதாக கூறுகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் இதுபற்றி விளக்கியுள்ளார். பாலை ஏ1 மற்றும் ஏ2 என வகைப்படுத்துகின்றனர். இந்த இரண்டு வகை பாலிலுமே கேசீன் என்ற புரதம் நிரம்பியிருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிற மாட்டுப்பாலானது ஏ2 வகையைச் சேர்ந்தது. இது ஆரோக்கியமானது; பாதுகாப்பானதும்கூட.
அதிக கேசீன் புரதம் வேண்டும் என்பதற்காக சில நாடுகளில் கலப்பட கால்நடை இனங்களின் பாலை பயன்படுத்துகின்றனர். இது ஏ1 வகையைச் சார்ந்தது. இந்த பாலைக் குடிப்பது டைப் 1 டயாபட்டிஸ் மற்றும் மனநல கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது என்கிறார் மருத்துவர் மோகன். அதேசமயம் டைப் 1 நீரிழிவு நோயானது இதனால்தான் வருகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார் அவர்.
மேலும், தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு பாலை பயன்படுத்துவதும் டைப் 1 நீரிழிவு நோய்க்கு ஒருவகையில் காரணமாகலாம் என்கிறார் மோகன். நீரிழிவு நோயாளிகளுக்கு பால் சிறந்த உணவுதான். இது இதய வலிமையை அதிகரிக்கிறது. அதேசமயம் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார் அவர்.