#BREAKING : ஜூலை 2வது வாரத்தில் பொதுத்தேர்வு – 2.30 மணிக்குள் அரசு தெரிவிக்க உத்தரவு – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று  உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது, இத்தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி, தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பக்தவத்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து, பெற்றோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஜூன் 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கால் விடுதிகளில் புத்தகங்களை விட்டுச் சென்ற மாணவர்களால் தேர்வு எழுதுவது கடினம் என்பதால் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.

நீதிபதிகள் : லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் நலனில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்?

நீதிபதிகள் : பத்தாம் வகுப்பு தேர்வை ஒரு மாதம் வரை ஏன் தள்ளி வைக்க கூடாது?
மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நீதிபதிகள் : கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா? 9 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விஷயம்

நீதிபதிகள் : 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்க வேண்டுமா?

நீதிபதிகள் : பொது முடக்க காலத்திலேயே 10ம் வகுப்பு தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கிறீர்கள் ?

நீதிபதிகள் : பள்ளிகள் திறப்பதை ஜூலையில் முடிவெடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறுவீர்களா ?

10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ல் நடத்த ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரை உடனே ஆஜராக கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அத்துடன் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்காவிட்டால் தேர்வை ஒத்திவைக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 2வது வாரத்தில் பொதுத் தேர்வை நடத்துவது குறித்து முடிவெடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே