முரசொலி நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அசுரன் திரைப்படத்தை பார்த்த பின்னர் பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.
இதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய பாமக தலைவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை அடுத்து இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.
இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், முரசொலி நிர்வாக இயக்குநர் உதய நிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை சாஸ்திரி பவனில் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், உதய நிதி ஸ்டாலினிடம் முரசொலி இடம் தொடர்பாக விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.