#BREAKING : தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், மார்ச், 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.

இம்மாதம் துவக்கத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

அதன்பின், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்தது. 

இம்மாதம், 15ம் தேதி, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் தளர்வுகளை நீக்கி, முழு ஊரடங்கை அறிவிக்கும்படி, மருத்துவ குழு பரிந்துரை செய்தது.

அதையேற்று, 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கை, முதல்வர் அறிவித்தார்.

அதன்பின், மதுரை, தேனி மாவட்டங்களிலும், குறிப்பிட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவல் இன்னமும் குறையவில்லை. சென்னையில், 19ம் தேதியிலிருந்து, முழு ஊரடங்கு அறிவித்தும், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த படியே உள்ளது.

‘நோய் தொற்று உச்சத்தை தொட்டு, பின் குறைய துவங்கும். அதற்கு முன்பாக, ஊரடங்கை முழுமையாக தளர்த்தினால், நோய் பரவல் வேகம் இன்னும் அதிகரிக்கும்’ என, சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இச்சூழ்நிலையில், மூன்று மாதங்களாக, ஊரடங்கு காரணமாக, எங்கும் செல்ல முடியாமல் தவித்து வரும் மக்கள், எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆனால், மேலும் ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது, எந்த மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவிப்பது, எங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சென்னை, தலைமை செயலகத்தில், இன்று காலை, 10:30 மணிக்கு, மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 5,12,19,26 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லை அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்.

ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலுகைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ஜூலை 6-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்.

ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் இருக்கும்.

முழு முடக்கம் உள்ள இடங்களில் ஜூன் 30 வரை வழங்கப்பட்ட இ பாஸ் ஜூலை 5 வரை செல்லும்.

சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் மக்கள் செல்ல தடை நீடிக்கும்.

வழிபாட்டுத் தலங்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை இருக்கும்.

மாவட்டங்களுக்கு இடையே சென்று வர இபாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

அந்தந்த மாவட்டங்களுக்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு முடக்கம் தொடரும்.

ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே