ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை காவல் எல்லை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லை அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்.
ஜூலை 6முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலுகைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ஜூலை 6-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும்.
ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் இருக்கும்.
முழு முடக்கம் உள்ள இடங்களில் ஜூன் 30 வரை வழங்கப்பட்ட இ பாஸ் ஜூலை 5 வரை செல்லும்.
சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் மக்கள் செல்ல தடை நீடிக்கும். வழிபாட்டுத் தலங்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை இருக்கும். மாவட்டங்களுக்கு இடையே சென்று வர இபாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
அந்தந்த மாவட்டங்களுக்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு முடக்கம் தொடரும்.
ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.