#BREAKING : திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை தொடங்கினார் பாரதிராஜா!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள்.

மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

இதனால், படம் தயாரிப்பவர்களுக்கென ஒரு புதிய சங்கமொன்றை உருவாக உள்ளதாகவும் அந்த சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராக செயல்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாரதிராஜா கூறியதாவது:

இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றுக்கும் பதில் தேடுவது முக்கியம்.

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை.

இது செயல்பட வேண்டிய காலகட்டம். கரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையுலகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. 

கையைப் பிசைந்துகொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே