சென்னையில் பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பேனர் மற்றும் கொடி கட்டியதற்காக, கைது செய்யப்பட்ட 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என ஆலந்தூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பள்ளிக்கரணையில் கடந்த 12ஆம் தேதி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பேனர் வைத்த ஜெயகோபால் மீதும், பேனருக்கு இரும்புச் சட்டம் வழங்கிய அவரது உறவினர் மேகநாதன் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் கையில் எடுத்ததால், விசாரணை தீவிரம் அடைந்தது.
ஜெயகோபாலும், மேகநாதனும் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அச்சத்தில், இருவரது நண்பர்களும் உறவினர்களும் கூட தலைமறைவாகி இருந்தனர்.
அதில் ஒருவரான ஆப்ரகாம் என்பவரின் செல்போன் சிக்னலை, ஆராய்ந்ததின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் ஜெயகோபால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், நேற்று அவரைக் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவரிடம் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுபிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க, நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதை அடுத்து, ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே பேனர் அமைக்க உதவியதாக பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 ஊழியர்களான பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த ஆகியோர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் ஸ்டார்லி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ஸ்டார்லி, சாதாரண வழக்குகளுக்கு நீதிமன்றம் வரை அழைத்து வரவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
தாங்களே முடிவு செய்து கொள்ளும்படி அவர் கூறியதைத் தொடர்ந்து 4 பேரையும் பள்ளிக்கரணை போலீசார் திரும்பி அழைத்துச் சென்றனர்.
நான்கு பேர் மீதும் சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதால் அவர்களை காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் நான்கு பேரையும் ரிமாண்ட் செய்ய நீதிபதி மறுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.