நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத, தனது தந்தை மூலம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, பிடிபட்ட மாணவர் உதித் சூர்யா சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து உதித் சூர்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தான் வேண்டாம் என்று மறுத்தபோதும் தனது தந்தை தான் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்து இப்படி செய்துவிட்டார் என்று உதித் சூர்யா கூறியதாகவும், மகனை டாக்டர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் மோசடி செய்ய கேரளாவில் உள்ள நீட் தேர்வு மையத்துக்கு ரூபாய் 20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தந்தை வெங்கடேசன் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே “தன்னைப்போல் தமிழகத்தில் 60 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காட்டுகிறேன் கைது செய்யுங்கள்” என்று அதிர்ச்சியூட்டும் தகவலை உதித் சூர்யா சிபிசிஐடி அதிகாரிகளிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.