BREAKING : எம்பிபிஎஸ் கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமற்றது

தமிழக மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் கலந்து கொண்டதால் அதனை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கலான மனுவில், “தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 744 இடங்களில், இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர் என்றும் எனவே, 2019- 2020 ஆம்  ஆண்டிற்கான கலந்தாய்வை ரத்து செய்வதோடு, பட்டியலில் இருந்து வெளிமாநில மாணவர்களை நீக்கவும், புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில்  மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் வெளி மாநிலத்தவர் என கூறப்படும் 126 பேரையும் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அவர்களில் சான்றுகள், ஆவணங்கள் சரியாக இருந்த 68 பேர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் “கலந்தாய்வினை முழுமையாக ரத்து செய்து புதிதாக நடத்துவது சாத்தியமானதல்ல என்றும் தேவையெனில் சான்றிதழ்களை சரிபார்த்துக்கொள்ளலாம்” என்றும் கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே