தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் பாஜகவின் எஸ்.வி.சேகர்

தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து  பாஜகவின் எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தேசிய கொடி அவமதிப்பு வழக்கு

எம்ஜிஆர் சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்ட் 15ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து, தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது, ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன்  மனு

இதனால் எஸ்.வி.சேகர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன்  மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது,மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன்.

இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி.சேகர்  உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் மன்னிப்பு கோரினால் முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், இல்லையென்றால்  வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

காவல்துறையின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக எஸ்.வி.சேகர் சார்பில் உத்தரவாதம் அளிக்க அவகாசம் அளித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

ஆழந்த வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி.சேகர்

இந்நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து  பாஜகவின் எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார்.

எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என்றும் எஸ்.வி.சேகர் மனுவில் உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து முன் ஜாமின் வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே