‘‘நந்திகிராம் தொகுதியில் பாஜக தேர்தல் முறைகேடு’’ – வாக்குச்சாவடியில் இருந்து ஆளுநருக்கு போன் செய்த மம்தா பானர்ஜி

வாக்குச்சாவடி மக்கள் முன்னிலையிலேயே ஆளுநர் தன்கரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிராம மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக புகார் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

நந்திகிராம் தொகுதி கிழக்கு மித்னாபூர் மாவட்டத்துக்குட்பட்டது. நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது. நந்திகிராமில் திரிணமூலுக்கு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்ததில் சுவேந்து அதிகாரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

தனது மக்கள் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்டே, நந்திகிராமில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது மம்தாவை வீழ்த்துவேன் என சுவேந்து அதிகாரி சவால் விட்டுள்ளார். அதுமட்டுமின்றி மிட்னாபூர் எப்போதுமே மண்ணின் மைந்தனையே தேர்வு செய்யும் எனவும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

சுவேந்து அதிகாரி கட்சிக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவுக்கு தாவி விட்டார், அவருக்கு வாக்களித்த மக்களையும் அவர் முதுகில் குத்தி விட்டார் என மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்தார்.

இதனால் நந்திகிராம் நட்சத்திர தொகுதி என்பதை விடவும் பரபரப்பான தொகுதியாக மாறியுள்ளது. இருதரப்பினரும் இந்த தொகுதியை கைபற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது சிலர் கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வாக்கு சாவடிக்கு வெளியே திரண்டு இருந்த மக்கள் முன்னிலையிலேயே ஆளுநர் தன்கரை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

உள்ளூர் கிராம மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார். உடனடியாக தலையிட்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘நந்திகிராம் தொகுதியில் பாஜகவினர் தேர்தல் முறைகேடுகளை செய்கின்றனர். பிஹார் மற்றும் உ.பி.யில் இருந்து வெளியூர் நபர்களை வர வழைத்து திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக முறைகேடுகளை செய்கின்றனர்.

தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் 60-க்கும் மேற்பட்ட புகார்களை அனுப்பியுள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநரிடமும் புகார் தெரிவித்துள்ளேன். ’’ எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே