வரும் சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அக்கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவைத் தாண்டி நீடித்த நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குத் தேவையான பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

இதில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது.

தேர்தலுக்குக் குறைவான நாட்களே உள்ளதால் ஏற்கனவே அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இருப்பினும், பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 20 பேரை தேர்வு செய்வதில் இழுபறி நிகழ்கிறது. 

வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் டெல்லி சென்றுள்ளார்.

நள்ளிரவை தாண்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி இன்று மாலை பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வானதி சீனிவாசன், ஹெச் ராஜா உள்ளிட்டோருடன் குஷ்பு, கவுதமி ஆகிய திரை பிரபலங்களையும் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே