சுஷாந்துக்கு பைபோலார் டிசார்டர் – மும்பை மாநகர காவல்துறை ஆணையர் பரபரப்பு தகவல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னதாக சுஷாந்த் கடுமையான மன அழுத்தத்திலிருந்ததாகக் கூறப்பட்டது, பின்னர் அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பலரும் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் மரணம் தொடர்பாக இதுவரை 50-க்கும் அதிகமானவர்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்
சுஷாந்த் சிங் ராஜ்புத்

இதற்கிடையில் சுஷாந்தின் உயிரிழப்புக்கு அவரின் தோழி ரியா சக்ரபர்த்திதான் காரணம் என சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பீகார் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

எனவே, சுஷாந்த் விவகாரம் தொடர்பாக மும்பை, பீகார் ஆகிய இரு மாநில காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சுஷாந்த் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள மும்பை காவல்துறை உயர் அதிகாரி பரம்பீர் சிங், “மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்கு பைபோலார் பிரச்னை இருந்துள்ளது.

அதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தது அவரின் மருத்துவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் அவரது மரணத்துக்கு எந்தச் சூழ்நிலை வழிவகுத்திருக்கும் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம்.

மேலும் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் ஜூன் 9-ம் தேதி மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்.

சுஷாந்த் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக திஷா சாலியனின் பெயரையும், தன் பெயரையும் தொடர்ந்து கூகுளில் தேடிய வண்ணம் இருந்துள்ளார்.

இந்த விவரங்கள் அவர் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து தெரியவந்தன.

திஷா சாலியன் தற்கொலை குறித்து சுஷாந்த் வருத்தப்பட்டு மேலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம்.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

சுஷாந்த் விவகாரத்தில் எந்தவொரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை.

சுஷாந்தின் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் பீகார் போலீஸ் கூறியுள்ளது தவறானது.

எங்கள் விசாரணையின் தொடக்கத்தில் அவரது கணக்கில் ரூ.18 கோடி இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

தற்போது அதில் ரூ 4.5 கோடிதான் உள்ளது. சுஷாந்தின் கணக்கிலிருந்து ரியாவின் கணக்குக்கு நேரடி பரிமாற்றம் தொடர்பான எந்தத் தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை.

நாங்கள் இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

சுஷாந்த் இறந்த இரண்டாவது நாள், அதாவது ஜூன் 16-ம் தேதி சுஷாந்தின் தந்தை, சகோதரி மற்றும் மைத்துனர் போன்ற அனைவரும் தங்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

ஆனால், அப்போது யாரும் நடிகரின் மரணம் தொடர்பாக எந்த சந்தேகமும் தெரிவிக்கவில்லை.

தொழில் போட்டி, நிதி பரிவர்த்தனைகள், ஆரோக்கியம் போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றன.

அவரது லேப்டாப், கைபேசி ஆகியவற்றைத் தொழில்நுட்ப ஆதாரமாக எடுத்துள்ளோம் அனைத்தையும் ஆய்வு செய்து வருகிறோம்” என்று பேசியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே