மே.29 முதல் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்

குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான ரேசன் பொருள்களுக்கு மே 29 ஆம் தேதி அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

மாநிலத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் உதவித்தொகையாக அரிசி வாங்குகிற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரசு அறிவிப்பின்படி மக்களுக்கு அவை வழங்கப்பட்டன.

மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்டது.

அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொருத்து, கூடுதலான அரிசியும் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி, இந்த 3 மாதங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

அதன்படி, ஜூன் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் மே 29 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து 29, 30, 31 ஆகிய 3 நாட்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்கப்படும்.

அதில், பொருள் வழங்கப்படும் நேரம் மற்றும் நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இந்த டோக்கனை வைத்து கொண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் விலையில்லா பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

ரேஷன் பொருள்கள் எந்த பகுதிக்கு, எப்போது வழங்கப்படும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கனில் அட்டைதாரர் விவரம், நிவாரணம் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அதில் உள்ள தேதி, நேரத்தின் போது தான் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று நிவாரண பொருள்களை பெற்று கொள்ள வேண்டும்.

டோக்கன் வாங்க யாரும் கடைக்கு வர வேண்டாம். வீட்டில் வந்து வழங்கப்படும்.

பொருள்கள் வாங்க வரும் போது ஸ்மார்ட் கார்டு, டோக்கன் ஆகியவற்றை வாகன சோதனையின் போது காட்ட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வந்து பெற்று செல்ல வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே