வங்கிகள் அனைத்தையும் தனியார் ஆக்க வில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!!

நாடு முழுவதும் இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், “எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தனியார்மயமாக்குவது என்ற முடிவு திட்டமிட்ட ஒன்று. நாட்டு நலனுக்கு உகந்தபடி வங்கிகள் செயலாற்றவே விரும்புகிறோம்.

அதேநேரத்தில், எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது.

தனியார் வசம் தரப்படும் வங்கிகளைப் பொறுத்தவரையில், அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் நலனும் காக்கப்படும். எந்தச் சூழலிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது” என்றார்.

முன்னதாக, பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வங்கி ஊழியர்கள், நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

சுமார் 148 லட்சம் கோடி ரூபாய் மக்களின் சேமிப்பு பணம் வங்கிகளில் இருப்பதாகவும், அவற்றை தனியாருக்கு விற்பது நியாயமற்றது எனவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, பணியில் இடஒதுக்கீடு முறையும் மறுக்கப்படும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே