இஸ்லாமியர் குறித்து சர்ச்சை விளம்பரம்… பேக்கரி உரிமையாளர் கைது…!

ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, தி.நகர், மகாலட்சுமி தெருவில் வசிக்கும் பிரசாந்த் அதே முகவரியில் Jain Bakeries & Confectioneries என்ற பெயரில் பேக்கரி நடத்தி வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், பிரசாந்த் அவருடைய வாட்சப் குரூப்பில் பேக்கரி குறித்து விளம்பரம் செய்தபோது, அதில் ”Made By Jains On Orders, No Muslim Staffs” என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த விளம்பரத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டு இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிறகு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் பிற மதம் பற்றி இழிவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லீம் மக்களால் கொரோனா நோய் பரவி வருவதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாவதால், ஜெயின் மக்கள் பயத்தில் உள்ளனர்.

அதனால், தனது கடையில் பொருட்கள் யாரும் வாங்க வரவில்லை எனவும் இதனால்தான் இப்படி ஒரு விளம்பர அட்டையை தயாரித்ததாகவும் போலீசாரிடம் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது போன்று ஒரு நேரத்தில் ஜெயின் மக்கள் நம்பிக்கைக்கு உகந்த ஒரு கடையாக தனது கடை இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு விளம்பரத்தை தயாரித்ததாக விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை கடுமையாக எச்சரித்த போலீசார் காவல்நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 525 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: