அயோத்தி ராமர் கோயில் – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பிரதமர் தெரிவித்தார்.

“ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீரத் ஷேத்ரா” என்ற பெயரில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமர் அறிவித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 5 ஏக்கர் பரப்பளவில், ராமர் கோவில் கட்டுவதற்கான செயல் திட்டம், மத்திய அரசிடம் தயாராக இருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஜனநாயக நெறிமுறைகளை மதித்து, அதன்மீது நம்பிக்கை கொண்டு குறிப்பிடத்தக்க தங்கள் ஒத்துழைப்பை இந்திய மக்கள் வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்காக, நாட்டின் 130 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ் வணக்கங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் வசிக்கும், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் உட்பட அனைத்து மதத்தினரும், ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இதன் அடிப்படையிலேயே வளர்ச்சி என்பது ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்குமானது என்பதில் தமது அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாகவே அனைத்து வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடன், தமது தலைமையிலான மத்திய அரசு, ஒவ்வொரு இந்தியர்களுக்காகவும் பாடுபட்டு வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே