ஆதரவற்ற தெரு நாய்களை ஆதரிக்கும் சென்னை விலங்கு ஆர்வலர் அஷ்வத்

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் தெரு நாயின் தலையில் கல்லால் தாக்கினார்.

இதனால் இரண்டு கண்களும் வெளியே வந்த நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரத்த வெள்ளத்தில் அலறியபடி இருந்துள்ளது.

இதனைப் பார்த்த மக்களுள் பலர் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருக்கையில், சிலர் விலங்கு நல அமைப்புக்கு தகவல் கொடுத்ததோடு காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்து அதற்கு சிகிச்சை கொடுப்பதற்கு முயற்சி செய்தனர்.

ஆனாலும் எவ்வித பலனும் இல்லாமல் அந்த நாய் இறப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான அஸ்வத் எனும் விலங்குநல ஆர்வலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஸ்வத், இறக்கும் தருவாயில் இருந்த அந்த நாயை அரும்பாக்கம் காவல்துறையினர் உதவியுடன் மீட்டு வேப்பரி கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு அந்த நாயின் இரு கண்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

மேலும், இனி வரும் காலங்களில் அந்த நாய் பார்வை இல்லாமல் மட்டுமே வாழ இயலும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த நாயை அஸ்வத் தனது வீட்டிற்கு எடுத்து வந்து, அதற்கு பைரவி என பெயரிட்டு வளர்த்து வருகிறார்.

இந்த நாயை கல்லைக் கொண்டு அடித்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

அவரை காவல்துறை உதவியோடு தண்டையார்பேட்டையில் உள்ள காப்பகத்தில் அஸ்வத் மற்றும் அவரது நண்பர்கள் சேர்த்துள்ளனர்.

விலங்குநல ஆர்வலர் அஸ்வத், இதேபோன்று சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாய்களை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று அதற்கு சிகிச்சை அளித்து, பின்பு நாய் வேண்டுவோரிடம் அதனைக் கொடுத்து வருகிறார்.

மேலும் சில ஊனமான நாய்களைத் தனது வீட்டிலேயே வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

தற்போது அடிபட்டு பார்வை பறிபோன அந்த நாயை யாரேனும் பாதுகாப்பாக வளர்ப்பதாக இருந்தால் அவர்களிடம் கொடுப்பதாகவும், இல்லை என்றால் தானே வளர்ப்பதாகவும் கூறுகிறார் அஸ்வத்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே