ஐ.பி.எல் 2022ல் மேலும் 2 அணிகளுக்கு ஒப்புதல்..!!

2022-ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் விளையாடுவதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

2021 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

2008-இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, ரசிகா்களின் பேராதரவால் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தொடா்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

இதனால் ஐபிஎல் போட்டிகளில் ஆடும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு 8 அணிகள் விளையாடிய நிலையில், கூடுதாக இரு அணிகளைக் களமிறக்கும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.

ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் (சர்தார் படேல் மைதானம்) கட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஒரு ஐபிஎல் அணி சேர்க்கப்படவுள்ளது.

அதன்படி 2022 ஐபிஎல் போட்டியில் குஜராத் சார்பாக ஓர் அணி புதிதாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆமதாபாத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டுப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்ப்பது பற்றிய முடிவை எடுத்துள்ளது பிசிசிஐ.

இதன்படி, 2022 ஐபிஎல்-லில் இருந்து கூடுதலாக 2 அணிகளைச் சேர்த்து மொத்தமாக 10 அணிகளுடன் ஐபிஎல் போட்டியை நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே