அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது.
இவற்றில் சுமார் 92,000 இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள்.
இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றது மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890.
இதற்கு தோராயமாக 30,000 மாணாக்கர்கள் விண்ணப்பிப்பார்கள்.
பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள்.
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணாக்கர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.
தற்பொழுது முதல்வரின் உத்தரவின்படி புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியிலும், அதே போன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngptc.com மற்றும் www.tngptc.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
மாணாக்கர்கள் 20.07.2020 தேதி முதல் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கட்டுப்பாட்டு அறை எண்களை 044-22351014, 044-22351015 தொடர்பு கொள்ளவும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.