எப்போதும் இளமையாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. மிகச் சிலர்தான் தங்கள் வயதைவிட இளமையான தோற்றத்தோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால், ‘அது எங்கள் குடும்ப உடல்வாகு’ என்பார்கள்.

இன்று நவீன மருத்துவம் வயதாவது என்பது என்றால் என்ன என்ற ஆராய்ச்சியில் பல விஷயங்களைக் கண்டறிந்திருக்கிறது. அதன் அடிப்படையில்தான் ஏராளமான ஆன்டி ஏஜிங் க்ரீம்கள் சந்தையில் கல்லாகட்டுகின்றன.

வயதாவது என்பது என்ன?

மருத்துவரீதியாகச் சொல்வதென்றால் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் எனப்படும் உடலியல் செயல்பாடுதான் வயதாகுதல் என்ற நிகழ்வு என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது, நம் உடலின் செல்லில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகள் சில சமயம் அதன் இயல்பான இருப்புக்கு கூடுதலாக ஒன்றையோ குறைவாக ஒன்றையோ கொண்டிருக்கும்.

இப்படி வித்தியாசம் ஏற்படும்போது, அந்த மூலக்கூறை பலவீனப்படுத்துகிறது.

இதனால் அந்த மூலக்கூறு இன்னொரு மூலக்கூறோடு இணைந்து தன்னை தகவமைக்க முயல்கிறது. ஆனால், இந்த முயற்சியில் உடலில் உள்ள புரத மூலக்கூறுகள் போன்ற சில செயல்பட இயலாமல் போகின்றன.

இதனால் அந்த செல் பலவீனமடைகிறது. இது ஒரு தொடர் சங்கிலி போல் ஒன்றோடு ஒன்று இணைந்து எல்லா செல்களும் மாற்றமடைவதே ஃப்ரீ ரேடிகல்ஸ் என்ற நிகழ்வு. இதனால், நாம் மெல்ல மெல்ல வயதான தோற்றத்துக்குச் செல்கிறோம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட் எனும் மூவா மருந்து


நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் ஆன்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் நுண்ணூட்டச்சத்து இந்த ஃப்ரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதனால், உடல் எப்போதும் இளமையான தோற்றம் கொண்டிருக்க முடிகிறது.நாம் உண்ணும் பல உணவுகளில் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. ஓர் உணவுப் பொருளில் எவ்வளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதென என்பதை அளவிட ஆக்சிஜன் ரேடிக்கல் உட்செரித்தல் திறன் (Oxygen Radical Absorbance Capacity – ORAC) என்ற கலைச் சொல்லை பாவிக்கிறார்கள்.

இந்த ஆரக் ரேட்டிங் அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட் விகிதம் அதிகமாக உள்ளதெனப் புரிந்துகொள்ளலாம். வயதாவதைத் தடுக்க இந்த ஆரக் ரேட்டிங் அதிகமுள்ள உணவுகளை அதிகமாக உண்பது நல்லது.

வயதாவதைத் தடுக்கும் ஆரக் ரேட்டிங் உணவுகள்

இலவங்கப்பட்டை : பட்டியலில் முதலில் இருப்பது இலவங்கப்பட்டை. 100 கிராம் அரைத்த இலவங்கப்பட்டை 267,536 என்ற Orac மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. எனவே வயதாவதைத் தடுக்க இலவங்கப்பட்டையை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாகப் பரிந்துரைத்து வருகின்றனர்.

பீன்ஸ் : ஓர் அரை கப் உலர்ந்த பீன்ஸின் ஆரக் மதிப்பெண் 13727. சிவப்பு பீன்ஸ் மதிப்பெண் 13259. பின்டோ பீன்ஸ் 11864 மற்றும் பிளாக் பீன்ஸ் 4181. பீன்ஸ் சாலட்களுக்கு ஒரு சிறந்த கூட்டணி. சூப்பிலும் பீன்ஸை மிதக்க விடலாம். பீன்ஸ் பொரியல் உடலுக்கு வலு சேர்க்கும்.

பழங்கள் : 1 கப் நெல்லிக்கனியின் ஆரக் எண் 13427. ப்ளூபெர்ரி 9019; சிறிய நெல்லி 8983. ப்ளாக்பெர்ரி 7701, பேரிக்காய் 7291 ; ராஸ்பெர்ரி 6058; ஸ்ட்ராபெரி 5938; சிவப்பு ஆப்பிள் (ஒரு முழு ஆப்பிள்) 5900 ; கிரானி ஸ்மித் ஆப்பிள் 5381 ; ஒரு கப் இனிப்பு செர்ரிகள் 4873; ஒரு கருப்பு பிளம் 4844; மற்ற வகையான பிளம்ஸ் 4118 மற்றும் ஒரு காலா ஆப்பிள் 3903 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

இந்தப் பழங்கள் இயற்கையான முறையில் விளைந்தவையாகவும் நவீன ரசாயன உரங்கள் இல்லாததாகவும் புத்தம் புதியனவாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள். காய்கறிகளுக்கும் இதே விதிதான்.

மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்களுக்கு நோ! : நவீன வேளாண்மை முறையில் உற்பத்தியான மரபணு மாற்றப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஒப்பீட்டளவில் ஃப்ரீரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைவான வேலையே செய்கின்றனவாம்.

ஜங்க் ஃபுட்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்ஸ், கூல் ட்ரிங்ஸ்களுக்கு தடா! : பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்ஸ்கள், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட்கள், கோலா, செயற்கைப் பழரச பானங்கள், கார்ன் சிரப், சாக்லெட்கள், மார்கரைன் சோயா போன்றவற்றில் ஃப்ரீ ரேடிக்கல்ஸைத் தூண்டும் வேதிப் பொருட்கள் கலப்பு நிச்சயம் இருக்கும். எனவே, இளமையான தோற்றம் வேண்டுவோர் நிச்சயம் இவற்றைத் தடுக்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே