பெய்ரூட் துறைமுகத்தின் இன்று எண்ணெய்கள் மற்றும் டயர்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தீயை அணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இராணுவ ஹெலிகாப்டர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழப்பு பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை.
தீ விபத்து நடந்த இடத்தில் ஒரு பெரிய புகை வெளியேறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கு முன் ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 191 பேர் உயிரிழந்தனர். 6,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் துறைமுகமும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.