கொரோனாவால் உயிரிழந்த முதியவர்.. JCB கொண்டு அடக்கம் செய்த அவலம் (VIDEO)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,401 லிருந்து 5,08,953 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வைரஸால் பாதிப்படைந்தவர்களில் 384 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 லிருந்து 15,685 ஆக அதிகரித்திருக்கிறது.

வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் மாநகரங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இதனால், மருத்துவமனைகளில் இறந்தவர்கள் தொடர்பாக பல குழப்பங்கள் நிலவி வருகின்றன.

மேலும், கொரோனா பயத்தால் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் கைவிட்டுச் செல்லும் கொடுமைகளும் நடந்து வருகின்றன.

அவ்வகையில், ஆந்திராவில் உறவினர்களின் பயத்தால் கைவிடப்பட்ட ஒருவரின் உடலை அதிகாரிகள் ஜேசிபி-யில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்த சம்பவம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆந்திராவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் மக்களுக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா பகுதியில் முன்னாள் நகராட்சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொற்று கண்டறியப்பட்ட அதே நாளிலே, 72 வயதான முதியவர் தனது வீட்டிலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

அவரது உடலை வீட்டுக்கு அருகில் அடக்கம் செய்வது தொடர்பாக அப்பகுதி மக்கள் தங்களது அதிருப்திகளை தெரிவித்ததால் அவரது பேத்தி நகராட்சி அதிகாரிகளை அழைத்து அவரது உடலை எடுத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு உடைகளை அணிந்து வந்த அதிகாரிகள், அவரது உடலை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

ஜேசிபி இயந்திரத்தின் முன்பகுதியில் உடலை வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை ஜேசிபி மற்றும் டிராக்டர்களில் கொண்டு செல்லும் காட்சி அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் மரணத்திலும்கூட மரியாதைக்கு தகுதியானவர்கள்தான். மனிதாபிமானமற்ற இந்தச் செயல் அரசுக்கு வெட்கக்கேடான ஒன்றாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் அலுவலகம் இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும்,இது ஒரு மனிதாபிமானமற்ற செயல்.

இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வது தொடர்பான நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெகன் மோகனும் இந்தச் சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸால் பாதிப்படைந்து இறந்த நோயாளி ஒருவரின் உடல் ஜேசிபியில் கொண்டு செல்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மனிதத்தன்மையற்ற வகையில் சிலர் செயல்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் வேறு இடங்களில் மீண்டும் நடக்கக் கூடாது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ், பலசா நகராட்சி ஆணையர் நாகேந்திர குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜீவ் உள்ளிட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதே மாவட்டத்தில்தான் கடந்த ஜூன் 24-ம் தேதி கொரோனா வைரஸால் பாதிப்படைந்து இறந்த பெண் ஒருவரின் உடல் டிராக்டரில் கொண்டுசெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

கொரோனா அதிகளவில் பரவத் தொடங்கியது முதல் இந்த வைரஸால் இறக்கும் நபர்களின் உடல்களைக் கையாள்வதில் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே