இந்தியாவில் பணிகளை நிறுத்தி கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவிப்பு..!

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, ‘ கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அமைப்பின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது தற்செயலானது அல்ல.

அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன.

காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான்.

சமீபத்தில் டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து காவல்துறை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு அநீதி நிலவுகிறது.

அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர இந்த அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை, மறுப்பையே, எதிர்ப்பையே உறையச் செய்ய முயற்சி நடக்கிறது.

எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல் குற்றம் செய்யும் நிறுவனங்கள்போன்று மனித உரிமை அமைப்புகளை நடத்துவது, எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவது என்பது விமர்சனக் குரல்களை ஒடுக்கும் ஒரு வகையான அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்குவதாகும்.

அம்னெஸ்டி அமைப்பு சர்வதேச சட்டம், இந்தியச் சட்டங்களுக்கு உடன்பட்டே முறைசார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு லட்சம் இந்தியர்கள்தான் இதில் நன்கொடை பங்களிப்பு செய்தனர்.

எனவே இவை அந்நிய நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடையது அல்ல. சட்டரீதியான நிதித் திரட்டலை அரசு தற்போது நிதி மோசடியாகச் சித்தரிக்கிறது.

மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் அரசின் செயலின்மையையோ மீறல்களையோ சுட்டிக்காட்டினால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. அம்னெஸ்டி அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்குக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.

அம்னெஸ்டி இந்தியா, மனித உரிமைகள் பணிக்காக, உள்நாட்டில் நிதி திரட்டுவதற்கான ஒரு தனித்துவமான சர்வதேச அமைப்பாகச் செயல்படுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் பணிகளை ஆதரித்துள்ளனர்.

சுமார் 1,00,000 இந்தியர்கள் நிதிப் பங்களிப்புகளை அம்னெஸ்டி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர்.

இந்தப் பங்களிப்புகளுக்கு அரசாங்கம் இப்போது சட்டத்துக்கு எதிரான நிதி திரட்டும் பணமோசடி எனச் சித்தரிக்கிறது என்றும் அம்னெஸ்டி இந்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் மனித உரிமை அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு அடக்குமுறைக் கொள்கைகளின் நீட்சியே எங்கள் மீதான தாக்குதல் என்று அம்னெஸ்டி விமர்சித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே