சாதிய வெறிக்கு சவுக்கடி கொடுத்த அமிர்தம்! தடைகளை தகர்த்தெறிந்து இன்று தேசிய கொடியை ஏற்றினார்!

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவி அமிர்தம் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தேசியக்கொடியேற்ற விடாமல் சிலர் தடுத்தனர். உரிமையை பறித்து ஒதுக்கி வைத்தனர்.

எந்த நிகழ்ச்சியிலும் முன்னிலை படுத்தாமல் புறக்கணித்தனர்.

இன்று அதே அமிர்தம் காவல்துறையினர் பாதுகாப்புடன் தேசியக்கொடியேற்றி தனது உரிமையை நிலைநாட்டியிருக்கிறார்.

தேசியக்கொடி ஏற்றிய அமிர்தத்திற்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வர். மாவட்ட எஸ்.பி அரவிந்தனும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமரும், மாநிலங்களில் முதல்வர்களும், மாவட்ட தலைமையகங்களில் மாவட்ட ஆட்சியர்களும், ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துக்களில் அந்தந்த தலைவர்களும் கொடியேற்றுவது வழக்கம்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவி அமிர்தத்தை கொடியேற்ற விடாமல் தடுத்தார் ஊராட்சி மன்ற செயலாளர், துணைத்தலைவரின் கணவரும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அமிர்தத்தை பணி செய்ய விடாமல் தடுத்து அவரது உரிமையை பறித்தனர்.

இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தினால் மனம் வேதனையடைந்த அமிர்தம்வேணு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

ஊராட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தன் பெயரை இதுவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுதவில்லை என்றும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் தேசியக்கொடியை ஏற்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

தனக்கான உரிமை, அதிகாரம் இல்லாதபடி ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து தன்னை புறக்கணித்து வருவதாகவும், தலைவர் பதவிக்கு தேர்வாகி 9 மாதங்கள் ஆகியும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாவி, பீரோ சாவி, கணக்கு வழக்கு கள் ஆகியவற்றை இதுவரை தன்னிடம் தராமல் ஊராட்சி மன்ற செயலாளரே வைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டார். பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் நடைபெற காரணமான ஊராட்சி செயலாளர் சசிகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதற்கு உறுதுணையாக இருந்த 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஞ்சாயத்து மட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் வேறு எந்த பஞ்சாயத்திலும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமை மறுக்கப்பட்ட அமிர்தம் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றி தனது உரிமையை நிலைநாட்டினார்.

அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வாழ்த்து கூறினார். கடந்த 8 மாதகாலமாக உரிமை மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வந்த அமிர்தம் உரிமையோடு தனது அலுவலகத்தில் அமர்ந்து உரிமையை நிலைநாட்டியுள்ளார்.

தனக்கு மறுக்கப்பட்ட உரிமையை போராடி பெற்றுள்ளார் அமிர்தம். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தான் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குடியரசு தினத்தன்றும், சுதந்திர தின நாளிலும் கொடியேற்றச் சென்ற போது உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டு அவமரியாதை செய்தனர்.

இன்றைக்கு அனைவரின் முன்னிலையிலும் நான் கொடியேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார் அமிர்தம்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே