”கேரளாவில் இப்போதைக்கு இடைத்தேர்தல் வேண்டாம்” அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்

கேரள மாநிலத்தின் குட்டநாடு, சாவரா ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பது என முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

‘கேரளத்தின் 14-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைகிறது. முந்தைய ஆண்டுகளில் இருந்ததைப் போலவே ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாதிரித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் 2021 மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, நவம்பரில் குட்டநாடு, சாவரா ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்கள் (டிசம்பர் – பிப்ரவரி) மூன்று மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். ஒரு தொகுதி காலியாக இருந்தால், அதை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951)-ன் பிரிவு 151- ஏ கூறுகிறது. தாமஸ் சாண்டியின் மரணம் காரணமாக 2019 டிசம்பர் 20 முதல் குட்டநாடு தொகுதி ஆறு மாதமாகக் காலியாக உள்ளது. சாவரா தொகுதி 2020 மார்ச் 8 முதல் காலியாக உள்ளது.

அதேசமயம், கரோனா தொற்றுப் பரவுவதால் அதைக் கட்டுப்படுத்துவதில் அரசு இயந்திரம் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. கேரளத்தில் நேற்று மட்டும் 3,349 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழலில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதில்லை. அடுத்த ஆறு மாதங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுடன் இந்தத் தொகுதிகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும்.

இந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது தேவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்தும். தவிர, மக்கள் பிரதிநிதித்துவத்தின் சாராம்சத்திற்கு இது பொருத்தமற்றதும்கூட.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இடைத் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.’

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே