நடிகர் அஜித் குமாரின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இயக்குநர் எச்.வினோத் உடன் அஜித் குமார் 3வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார். புதிய படத்திற்கு துணிவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் இயக்குநர் வினோத்துடன் அஜித் குமார் இணைந்து பணிபுரிந்தார். இரண்டு படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசியது. இந்தப் படம் பிங்க் என்ற ஹிந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தப் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். வலிமை படத்தையும் அவரே தயாரித்தார். இந்நிலையில், துணிவு படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார்.

துணிவு படத்தின் துணைத் தலைப்பாக ‘நோ கட்ஸ் நோ குலோரி’ என்று வைக்கப்பட்டுள்ளது. தைரியம் இல்லை என்றால் பெருமை கிடைக்காது என்ற அர்த்தம் கொள்ளலாம்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஸ்டைலாக கையில் துப்பாக்கியுடன் கால் மேல் கால் வைத்து அமர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். சாய்வு நாற்காலியில் கெத்தாக அமர்ந்திருக்கும் நடிகர் அஜித் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ஜிப்ரான்.

நடிகர் அஜித் இரு சக்கர வாகனத்தில் வட இந்தியாவை சுற்றிவருகிறார். இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நேரத்தில், புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதிகம் காக்க வைக்காமல் திடீரென படக் குழு அளித்த சர்பிரைஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே