அதிமுகவிலிருந்து விலகியிருக்கும் இந்த நாள் தேமுதிக தொண்டர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த எல்.கே சுதீஷ் பேசுகையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையும், கேட்ட தொகுதிகளையும் வழங்க அதிமுக தயாராக இல்லை. எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுதான் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் தீபாவளி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

தமிழகத்தில் அதிமுகவை தோற்கடிக்க தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.

அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே