வேளாண் மசோதாக்கள்; ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது – டிடிவி தினகரன்

விவசாயத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதள எம்.பி.யும் மத்திய உணவு பதப்படுத்துல்ஆதல் துறை அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.

மேலும், கடும் எதிர்ப்புகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார் .

மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்டுகளுக்கு, தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தையும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழிப்பவை என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (செப். 19) தன் ட்விட்டர் பக்கத்தில், “விவசாயத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல.

இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றைக் கொண்டுவர வேண்டும்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே